Metro (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்

மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோ ரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

ரஷ்யாவில் சுரங்கப்பாதைக்குள் விபத்தில் சிக்கும் மெட்ரோ ரெயில், அதில் பயணித்த பயணிகளின் நிலை, மீட்பு போராட்டம் என பரபரப்பான காட்சிகளை பதிவு செய்திருக்கும் ஆக்சன் படம் மெட்ரோ.

படத்தோட கதை என்னனா ...

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர் கசிவதை காண்கிறார் ஒரு பணியாளர். இதை மேலதிகாரிகளிடம் கூறுகிறார். ஆனால் அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதை தடுக்காவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று உணர்கிறார் பணியாளர். அதிகாரிகளோ, இவர் குடித்து விட்டு உளறுவதாக கூறுகிறார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் பலதரப்பட்ட மக்கள் செல்லும் மெட்ரோ ரெயில் காலையில் புறப்படுகிறது. அதில் செர்ஜி தன் மகளை ஸ்கூலுக்கு அழைத்துச் செல்கிறார். மேலும் அதில் ஸ்வெட்லானாவின் காதலன் அனடோலியும் பயணம் செய்கிறார்.

மெட்ரோ ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் வழியில் நீர் கசிவதை பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஓட்டுனர். பயத்தில் திடீரென பிரேக் பிடிக்கிறார். இதனால் மெட்ரோ ரெயில் ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகிறது. இதில் பலருக்கு காயமும் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதில் செர்ஜி மற்றும் மகள், அனடோலி மற்றும் சிலர் சிறு காயங்களோடு உயிர் பிழைக்கிறார்கள்.


பிழைத்தவர்கள் சிலர் மெட்ரோ ரெயில் செல்லும் பாதையில் தப்பித்து செல்கிறார்கள். செல்லும் வழியில் நீர் கசிவதால் மின்சாரம் பாய்ந்து பலர் உயிர் இழக்கிறார்கள். ஆனால் செர்ஜி, அவருடைய மகள், அனடோலி, மற்றும் ஒரு காதல் ஜோடி மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மெட்ரோ ரெயிலை விட்டு செல்கிறார்கள். ஒரு பக்கம் நீர் கசிந்து கொண்டே வருகிறது. இவர்கள் செல்லும் வழியில் மெட்ரோ ரெயிலின் ஒரு பாகம் அதிக நீர் வரத்தால் துண்டிக்கப்பட்டு இவர்கள் மேல் மோத வருகிறது. அதிலிருந்து தப்பித்து ஒரு குகைக்குள் மாட்டிக் கொள்கிறார்கள்.

உயிர் பிழைத்தவர்கள் சிலர் அடுத்த ஸ்டேசனுக்கு சென்று விடுகிறார்கள். மேலும் போலீசுக்கு தகவல் கொடுத்து மீட்பு பணிகளை தொடங்க வற்புறுத்துகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், அதிகமாக நீர் கசிந்து வருவதாலும் மீட்பு பணிகள் செய்ய முடியாமல் போகிறது.

இறுதியில் குகைக்குள் மாட்டியிருக்கும் செர்ஜி, மகள், அனடோலி, மற்றும் அவர்களுடன் இருப்பவர்களை போலீசார் மீட்டார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

செர்ஜி புஸ்கிபலிஸ்
படத்தில் நாயகன் செர்ஜி அளவான நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தன் மகளுக்கு எதுவும் ஆகக் கூடாது என்று துடிப்பது, அவள் தன்னை விட்டு சென்று விடக்கூடாது என்று உருகுவது போன்ற காட்சிகளில் இவரின் நடிப்பு பாராட்ட வைக்கிறது. சிறுமியாக வருபவர் அழகாக நடித்திருக்கிறார்.


ஸ்வெட்லானா கோட்சென்கோவா
நாயகி ஸ்வெட்லானா தன் மகள் பற்றி பதறும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் ஆண்டன் மெகர்டிச்வ்
பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம். ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக உள்ளது. மெட்ரோ ரெயில் விபத்தை தத்ரூபமாக காட்டியிருக்கிறார்கள். மெட்ரோ ரெயிலை மட்டுமே வைத்து அதில் காதல், பாசம் என அனைத்தையும் கலந்து கொடுத்த இயக்குனர் ஆண்டனை பாராட்டலாம்.

கோழி இடும் முட்டைகள் : 3 / 5
மொத்தத்தில் 'மெட்ரோ' - ஆபத்து!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar.com



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top