எவர்கிரீன் எம்.ஜி.ஆர்

'வாழ்ந்தவர் கோடி - மறைந்தவர் கோடி - மக்களின் மனதில் நிற்பவர் யார்..?' என்ற அர்த்தமுள்ள, அற்புத பாடல் வரிகளுக்கு ஒப்புவமை இல்லாத புத்தகராதியாக வாழ்ந்து காட்டியவர், பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன்.


தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், தொடர்ந்து 3 முறை தமிழகத்தின் தலைசிறந்த முதல்வராகவும் திகழ்ந்து, எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் மூலம் கோடானு கோடி தமிழர்களின் இதய தெய்வமாக போற்றப்படும் அவரது பிறந்த நாளை படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைத்து தரப்பினரும் போற்றி, கொண்டாடி மகிழ்கின்றனர்.

அதேபோல், மறைவு தினத்தையும் எம்.ஜி.ஆரின் நினைவுகளோடு லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

'புரட்சித் தலைவர்' என்ற சிறப்பு பட்டத்திற்கேற்ப, சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, மகத்தான திட்டமாக அவர் செயல்படுத்தியதால்தான், இன்று 50 வயதுக்குட்பட்ட தமிழக மக்களில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு பட்டம் பெற்ற பட்டதாரிகளாகவும், கை நிறைய பணம் சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கத்தினராகவும் உயர்ந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவான உண்மையாக நிரூபணமாகியுள்ளது.


'அரசின் சார்பில் தீட்டப்படும் திட்டங்கள் அடுத்த தலைமுறையினருக்கு நன்மை தருவதாக அமைய வேண்டும்' என்ற குறிக்கோளில் அபார நம்பிக்கை கொண்ட தொலைநோக்கு பார்வையாளரான எம்.ஜி.ஆர்., தனது மனித நேயத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு மக்கள் திலகமாகவும், பொன்மனச் செம்மலாகவும் விளங்கினார்.

ஏழ்மை, பசி, வறுமை ஆகிய சொற்களை வெறும் தமிழ் வார்த்தைகளாக மட்டுமே அறிந்திராமல், அவற்றை நெடுங்காலம் அனுபவித்துணர்ந்து, தனக்கு ஏற்பட்ட அந்த கொடிய நிலைமை வேறு யாருக்கும் இனி நேரக்கூடாது என இளம் வயதிலேயே அவர் சபதமேற்றார். தனது சபதத்தை நிறைவேற்றுவதற்கான தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்து-உழைப்பால் அந்த நிலைக்கு தன்னை உயர்த்திக் கொண்ட அசுர ஜாதகத்துக்கு சொந்தக்காரர், எம்.ஜி.ஆர். மட்டுமே என்றால்... அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.

இதன் அடிப்படையில் தான், 'நான் ஆணையிட்டால் - அது நடந்து விட்டால் - இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்' என்ற பாடலுக்கேற்ப அவரது ஆட்சிக் காலத்தில் ஏழைகளை பாதிக்கும் எந்த சட்டத்தையோ, திட்டத்தையோ எம்.ஜி.ஆர். நினைத்துக் கூட பார்த்ததில்லை.


அதனால் தான், எம்.ஜி.ஆரின் பிறந்த மற்றும் மறைந்த தினங்களில் தமிழகமெங்கும் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை - எளிய மக்கள், தங்கள் வீட்டின் வாசலில் அவரது புகைப்படத்தை வைத்து குத்து விளக்கேற்றி, பூ மாலை சூட்டி அலங்கரித்து புளகாங்கிதம் அடைகின்றனர்.

அவரது புகைப்படத்தின் கீழே உடைத்து வைக்கப்படும் தேங்காய் மூடியின் வெள்ளை வெளேர் 'பளிச்' சிரிப்பையும் முறியடிக்கும் வகையில் புகைப்படத்தில் இருந்தவாறு புன்னகைக்கும் அந்த ரோஜா மேனி தலைவரின் எழில் முகம் தமிழர்களின் மனக் கண்களில் சுவர் ஓவியமாக நிலைத்துப் போய் விட்டது.

தோல்வியை தோற்கடித்து... வெற்றி ஒன்றையே தனது வாழ்க்கை வரலாறாக்கிக் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தனிப்பெரும் தலைவர், எம்.ஜி.ஆர். ஒருவராக மட்டுமே இருக்க முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!
Thanks : Google Image & Maalaimalar



1 comments:

Yaathoramani.blogspot.com said...

சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top