பட்டத்து யானை (2013) - விமர்சனம்

மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை. இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா.

இவர்களுடன் சந்தானம், ஜெகன், மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மவுலி, அழகம் பெருமாள், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

மும்பையை சேர்ந்த முரளி ஷர்மா, ரோஹித் முன்னா, ஐதராபாத்தை சேர்ந்த அஜய் சேனா, தடையற தாக்க மகா காந்தி, ஜான் விஜய் ஆகிய 5 பேரும் வில்லன்களாக நடித்துள்ளார்கள்.

படத்தோட கதை என்னனா ...

காரைக்குடியில் சமையல்காரராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு வந்து சேர்கிறார் விஷால் & Co. ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் காரைக்குடியை காலி பண்ணிட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் கோஷ்டி.

திருச்சிக்கு போன இடத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் விஷால் மனதில் காதலை விதைக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள வில்லன் ஒருவன் முயற்சிக்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. ஐஸ்வர்யாவை அந்த பிரச்சினையில் இருந்து விஷால் எப்படி காப்பாற்றுகிறார் என்பது மீதி கதை.

படத்துல எனக்கு பிடித்த சில ....

ஹீரோ விஷால்
எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று விஷால் சமீபகாலமாக தீயா வேலைசெய்கிறார். ஆனால், காலம் அவரை ஏமாற்றியே வருகிறது. விஷாலுக்கு அதே நடிப்புதான். இடைவேளை பிளாக்கில் தான் யார் என்பதை சீரியஸாக சொல்லும்போதுதான் விஷால் சிரமப்பட்டு நடித்திருக்கிறார் போலும்.

விஷால் சண்டைக்காசிகளில் சக்கைபோடு போட்டாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் அது எதுவுமே பெரிய அளவில் பிரம்மிப்பை ஏற்படுத்தவில்லை. சண்டை காட்சிகளை அமைத்தவரின் புண்ணியத்தில் ஆக்சன் ஹீரோவாக அதகளம் செய்து தப்பித்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் விஷாலும் ஒருவர் என்பதால் ஆக்சனில் காது கிழிகிறது..! மனிதர் ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் நூறு, இருநூறு அடியாட்களை அடித்து போடுவது நம்பும்படியாக இருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்!

விஷாலைப் பொறுத்தவரை கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்தில் விஜய்யின் சாயல் தெரிகிறது. சந்தானத்துக்கு கொடுத்த முக்கியத்துவம் விஷாலுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஹீரோயின் ஐஷ்வர்யா
ஐஷ்வர்யா அர்ஜூன் சும்மா வந்து போகிறார். + 2 படிக்கும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். படம் முடியும்வரை விஷாலிடம் காதலை சொல்லாமலே போகிறார். பாடல் காட்சிகளில் ஜிகினா டிரெஸ்ஸில் ஜொலித்தாலும், கனவுக்கன்னியாக வரும் வாய்ப்பு குறைவுதான்..!

சந்தானம்
சந்தானம் தான் நிஜ ஹீரோ. படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான். ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது. பழைய படங்களின் ஸ்டைலையே இதிலும் தொடர்ந்திருந்தாலும் சிற்சில இடங்களில் நகைக்க வைத்திருக்கிறார். ஓட்டல் வைப்பதற்காக திருச்சிக்கு சென்று சீரழியும் இவரின் நகைச்சுவை கலாட்டா தியேட்டரில் விசில் பறக்கவைக்கிறது. மொத்ததில் சந்தானம் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து!

மயில்சாமி
மயில்சாமி சின்ன கேரக்டரா இருந்தாலும் மனசுல நிக்கிற மாதிரி நல்ல கேரக்டர். கானா பாலாவின் குரலில் அவர் பாடும் பாட்டு அசத்தல். அவர் போட்ட டான்ஸும் கலக்கல். மனிதர் டயலாக் டெலிவரியில் பின்னியெடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சித்ரா லஷ்மணனிடம் தான் எப்படி திருடினேன் என்பதைச் சொல்லும் காட்சியில் சந்தானத்தை ஓவர்டேக் செய்திருக்கிறார்

இசை தமன்
தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கானா பாலாவின் பாடல் & 'என்ன ஒரு என்ன ஒரு...' மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் அதற்கான நடன அமைப்பு அலுத்துப்போன ஒன்று. 'என்ன ஒரு என்ன ஒரு..' பாடல் டியூனை கேட்டால் வேறு எங்கோ போய் இடிக்குது.. கண்டுபிடிச்சிருவோம்.. மண்டைக்குள்ளேயே இருக்கு.. ( சிவாஜி நடித்த எங்கள் தங்க ராஜா படத்தில் வரும் இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாடலின் அப்பட்டமான காப்பி.)

ஜான் விஜய்
கொஞ்சம் வில்லத்தனம் நிரம்பிய குணசித்திர வேடத்தில் ஜான் விஜய் மட்டும் சோபிக்கிறார். ஆனால் விஷாலிடம் ஓர் உதை கூட வாங்காமல் எல்லாக் காட்சிகளிலும் எப்படியோ நழுவி விடுகிறார். ஜான் விஜய் மற்றும் அவரது கும்பல் செய்யும் கலாட்டா மிரட்டலுடன் சிரிப்பையும் வரவழைத்திருக்கிறது.

சண்டைக்காட்சி ஆன்டனி
சண்டைக்காட்சிகளில் ஆன்டனி செமயாக எடிட்டிங் செய்திருக்கிறார். தேவைப்படும் இடங்களில் மட்டும் ஸ்லோ மோஷன் வைத்து சண்டைக் காட்சிகளில் சீட் நுனிக்கே வர வைக்கிறார் ஆன்டனி.

இயக்குனர் பூபதி பாண்டியன்
முக்கியமான வில்லனாக வரும் அண்ணாச்சியும் செம பெர்பாமன்ஸ். ஓரிரு காட்சியில் வரும் நெல்லைசிவா, திருடுறவன் எல்லாம் ஜென்டில்மேன்தான் என்று சொல்வதற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்று கலகலக்க வைக்கும் வசனங்கள் படம் முழுவதும் தொடர்ந்து வந்து சிரிக்க வைக்கின்றன. வைத்தியின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும் படமாக்கிய விதம் அருமை.

வசனங்களில் சில படம் முடிந்த பின்னரும் நினைவில் இருக்கின்றன. கதை என்று பார்த்தால் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார்கள். காமெடி பாதி, ஆக்சன் மீதி என்று கொடுக்க முயன்று ஏதோ ஒன்றை திரையில் காட்டி இருக்கிறார்கள். முதல் பாதியில் காமெடியும், இரண்டாம் பாதியில் பாசம், காதல், சண்டை என கலந்து கொடுத்திருக்கிறார்.

கண்டிப்பாக எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. விஷால் ரசிகர்களும், காமெடிப் பிரியர்களும் வேண்டுமானால் பார்க்கலாம்.

கோழி இடும் முட்டைகள் : 2.5 / 5
பட்டத்து யானை - படம் அவ்வளவு சிறப்பு இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top