ஆணிவேர் - ஒரு பக்கக் கதை!

மதன்-மைதிலி திருமணம் பேசிமுடித்த நாளில் இருந்தே பிரச்சினை தான். பெண் வீட்டிலோ பையன் வீட்டிலோ யாராவது ஒருவர் உப்பு பெறாத விஷயத்துக்குக் கூட முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

இதனால் எந்த நிமிடத்திலும் கல்யாண ஏற்பாடுகள் நின்று விடுமோ என்ற பயம்கூட இருவர் வீட்டிலும் நிலைகொண்டிருந்தது.

மைதிலியின் அப்பா திருமண பத்திரிகை அச்சடித்த கையோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து மாப்பிள்ளையின் பெரியப்பா பத்திரிகை படித்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் மாப்பிள்ளையின் பெரியப்பா என்று அவர் நெற்றியில் எழுதியா ஒட்டியிருந்தது? அதனால் யாரோ வயசான பெரியவர் என்ற பட்டியலில் அவரை சேர்த்து விட்ட பெண்ணின் அப்பா அவரை கண்டு கொள்ளாமலே போய் விட்டார்.


அவர் போனாரோ இல்லையோ மாப்பிள்ளையின் பெரியப்பா இதையே ஒரு கொடும் குற்றமாக எடுத்துக்கொண்டு ஆகாயத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.

"என்னை அவமானப்படுத்தியவன் வீட்டில் பொண்ணு எடுத்துத்தான் ஆகணுமா?" என்று அவர் போட்ட கூச்சலில் அந்தப்பக்கமாக போய்க்கொண்டிருந்த ஒரு தெருநாய் கூட வாலை சுருட்டியபடி ஓட்டம் பிடித்தது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாப்பிள்ளையின் அப்பா பராங்குசம், சீர்வரிசைப்பட்டியலில் கடைசியாக பைக்கையும் சேர்த்தார். பைக் கொடுக்கமுடியாவிட்டால் தன் அண்ணனின் ஆசையை நிறைவேற்றிய மாதிரிஆச்சு. பைக் கிடைத்துவிட்டால் அண்ணனின் காட்டுக்கத்தலுக்கு கிடைத்த போனசாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.

கையில், பையில் இருந்ததெல்லாவற்றையும் பெண்ணின் கல்யாணத்துக்கு வாரிவிட்ட பெண்ணின் அப்பா செங்கோடன் புதிதாக வந்த 'பைக்' திணிப்பில் நொந்து போய்விட்டார். பைக் பற்றி சொல்லிவிட்டுப்போக வந்த மாப்பிள்ளையின் தூரத்து சொந்தக்காரரிடம் 'குய்யோ முறையோ' என்று கத்த ஆரம்பித்து விட்டார்.

அதைப்பார்த்து பயந்துபோன அந்த மனிதர், தோளில் போட்டிருந்த துண்டு பறந்து போவதுகூட தெரியாமல் அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த பஸ்சில் ஓட்டமாய் ஒடிப்போய் ஏறிக்கொண்டு விட்டார்.

அதிலிருந்து கடுகு வெடிக்க ஆரம்பித்தது.

எப்படியோ ஊர் பெரிசுகள் தலையிட்டதில் கல்யாணம் முடிந்து இதோ முதல் பந்தி ஆரம்பம்.

வீட்டு பெரிசுகள் இனி எப்படி முட்டிக்கொண்டாலும் மதனும் மைதிலியும் குடும்பத்தை ஓட்டியாகணுமே. ஆயிரம் காலத்துப் பயிராயிற்றே...

எல்லாம் முடிந்து மண்டபம் காலி செய்து மாப்பிள்ளை வீடு வந்தாயிற்று. பெண் வீட்டாரும் கொஞ்சப் பேர் உடன் வந்தார்கள். மாப்பிள்ளை தன் புது மனைவியிடம் "மைதிலி காபி கொண்டா" என்றான்.

மைதிலியும் காபி போட்டு எடுத்து வந்தாள். முதல் சேவகம் தானே... கணவனாகி விட்ட மதனிடம் காபியை நீட்ட, வாங்கிய மதன் கை நழுவ விட்டதில் காபி கொட்டி விட்டது. அதுவும் அவன் கல்யாண பேண்ட் மீது.


இந்த காட்சியை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரு வீட்டாரும் 'ஆஹா கிடைத்து விட்டதடா பிரச்சினை' என்ற சந்தோஷத்தில் நெருங்கினார்கள்.

"கூறுகெட்ட பிள்ளை, முதல் முதலா காபி கொடுக்கிறா. ஒழுங்கா கொடுக்கத் தெரியுதா? எப்படித்தான் குப்ப கொட்டப் போறாளோ?"

"திமிர் பிடித்த பையன், எங்கேயோ பார்த்துக்கிட்டு காப்பிய வாங்கினா இப்படித்தான்"

வெறும் வாயை மென்று கொண்டிருந்த கூட்டம் பிரச்சினையைக் கிளப்ப...

மைதிலியும், மதனும் அதிர்ந்தார்கள். இதுவரை எப்படியோ... இப்போது தாலி கட்டியாயிற்று. இனி இவர்களின் கவுரவ பசிக்கு நாம் இரையாகி விடக்கூடாது.

முடிவுக்கு வந்த மாப்பிள்ளை கேட்டான். "மைதிலி, என்னம்மா ஆச்சு?"

"முதன் முதலாய் ஆசையா காபி போட்டுக் கொண்டு வந்தேன். என் கவனக் குறைவினாலே காப்பி கொட்டிப் போச்சு மாமா". பெண் சொன்னாள்.

"இல்லம்மா... ஆசைஆசையாய் நீ போட்டுக் கொண்டு வந்த காபியை அஜாக்கிரதையாய் நான் வாங்கியதால் வந்த வினை. தப்பு என் மேலே தான்".- இது மாப்பிள்ளை.

வார்த்தைகளில் தம்பதியர் விட்டுக்கொடுத்து பேசிக்கொண்டிருந்தது இரு வீட்டாருக்குள்ளும் அதிர்ச்சி கலந்த வெட்கத்தை ஏற்படுத்தி வைக்க,

புதமண தம்பதியரைப் பார்த்து வாயடைத்து நின்றன பெரிசுகள்.

மைதிலி அடுத்த காபி கொண்டுவரப் போனாள்.

-பி.எஸ்.ஜேம்ஸ்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top