தென்மேற்குப் பருவக்காற்று - திரை விமர்சனம்

தமிழ் கிராமத்தின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டியுள்ள தென்மேற்குப் பருவக்காற்று படம்.
ஒரு குத்துப்பாட்டு + கவர்ச்சி இல்லை, யதார்த்தம் மீறிய காதல் காட்சிகள் இல்லை, டூயட் + பஞ்ச் வசனம் + பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை, பெரிய கதாநாயகன் + நாயகி இல்லை, காமெடிக்கு தனி ட்ராக் இல்லை. ஆனாலும் ஒரு தரமான படத்தை நமக்கு தந்திருக்கிறார் டைரக்டர் சீனு ராமசாமி.
படத்தோட கதை என்னானா...

வயல்பட்டியை சேர்ந்த வீராயி(சரண்யா) கணவனை இழந்தவள். ஒரே மகன் முருகனை(சேதுபதி) பாசமாய் வளர்க்கிறாள். அவன் ஆடுமேய்ப்பது, தாய் சம்பாதித்த காசை திருடி சாராயம் குடிப்பது என திரிகிறான்.

முருகன் ஆட்டு மந்தையில் நள்ளிரவு வயல்பட்டியை சேர்ந்த திருடர்கள் புகுகிறார்கள். ஆடுகளை களவாடி செல்கின்றனர். முருகன் பின்னால் விரட்டி முகமூடி அணிந்த ஒருத்தரை பிடித்து முகத்தை விலக்கி பார்த்த போது பெண் என்பதை கண்டு அதிர்கிறான்.

அவள் 'பேச்சி' (வசுந்தரா) என்பதும் குடும்ப தொழிலே 'களவு செய்தல்' என்றும் தெரிகிறது. தப்பி ஓடிய அவளை போலீசாருடன் தேடி அலைகிறான். தங்கையை அடையாளம் கண்ட முருகனை போட்டுத்தள்ள அண்ணன்மார் திட்டம் வகுக்கின்றனர். போலீசார் அவர்களை பிடித்து ஜெயிலில் அடைக்கின்றனர்.

அதன் பிறகு முருகனுக்கும் பேச்சிக்கும் காதல் மலர்கிறது. வீராயியோ வேறு பெண்ணை நிச்சயம் செய்கிறாள். பேச்சி அண்ணன்கள் காதலை எதிர்க்கின்றனர்.

அதன் பிறகு நடப்பவை உயிரை உருக்கும் கிளைமாக்ஸ்.
எனக்கு பிடித்த சில நடிகர்கள்...

முருகனாக விஜய் சேதுபதியும், பேச்சியாக வசுந்தராவும் கிராமத்து காதலில் கவிதையாய் பதிகிறார்கள். மிக எதார்த்தமான நடிப்பு இருவருக்கும்.

நாயகனுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட (கலைச்செல்வி) பெண்ணாக வருபவரும் அவரின் அப்பாவாக வருபவரும் வாழ்ந்திருக்கிறார்கள். "இனிமே இது என்கிட்ட இருக்கக் கூடாது மாமா.." என்று திரும்பிக் கொடுக்கும் இடத்தில் அவர் பேசும் வசனம் CLASSIC! அந்த முறைப்பெண் திரும்பி போகும் போது என்கண்ணில் கண்ணீர் திரண்டு நின்றது.

வீராயியாக வரும் சரண்யா தாயாய் வாழ்ந்துள்ளார். அதில் சில ...
  • ரத்ததான முகாமில் வந்து பிரச்சனை செய்துவிட்டு, அப்பனில்லாதவனுக்கு எல்லாம் ரத்தம் கொடுப்பாங்கன்னு சொன்னதும் ரத்தம் கொடுக்க போவது,

  • பையனுக்கு முடிவெட்ட ஓடிப்பிடித்து வெட்ட முயலும் காட்சி,

  • பையன் ஆட்டுக்கிடா போட்டியில் ஜெயித்த கப்பை தட்டி பறித்த எதிர்கோஷ்டியின் வீட்டிற்கே போய் அலப்பறை செய்துவிட்டு கப்பை வாங்கி வீட்டில் தூக்கியெறிந்துவிட்டு மகனை தேடுவது,

  • பையனுக்கு ஒரு கால்கட்டை போட பால்சங்கை வெத்தலைபாக்கை வைத்து தாம்பூலம் மாற்றும் காட்சி,

  • மகனுக்கு பெண் பார்ப்பது, மருமகளை ஊராரிடம் அறிமுகப்படுத்தி சந்தோஷப்படுவது

  • மகனை காதலிக்கும் வசுந்தராவிடம் அவர் ஊருக்கே போய் சண்டைக்கு நிற்பது

  • குத்துப்பட்ட வயிற்றில் துண்டைக் கட்டிக் கொண்டு பஸ்சேறி அட்மிட் ஆகும் காட்சி
ஏ.ஆர்.ரஹ்நந்தன் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஜீவன் பாய்ச்சுகிறது. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடல் நெஞ்சை நனைக்கிறது.

கிராமத்துத் தெருக்கள், ஆட்டு மந்தைகள், களவாணிகள், மினி பஸ்கள் பயணம் என மிக அற்புத ஒளிபதிவு. அடை மழையில் ஆடுதிருட வரும் காட்சியாகட்டும், புழுதிக்காட்டில் சண்டையிடும் காட்சியாகட்டும், நம்மை அங்கேயே கொண்டு போய் உட்கார வைத்துவிடுகிறார் டைரக்டர் சீனு ராமசாமி.

தென்மேற்கு பருவக்காற்று - கண்டீப்பாக தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்.


என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top